நாசிக்: பிரதமர் நரேந்திர மோடியை நாளை மறுநாள் சந்தித்து, விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசப்போவதாக மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் கடந்த 2-ம் தேதி இணைந்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு நிதித்துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் நாசிக் நகரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் எனக்கும், எங்கள் கட்சியினருக்கும் ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி. பிரதமர் மோடியை 18-ம் தேதி சந்தித்து பேசவுள்ளேன். அப்போது மகாராஷ்டிர விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசுவேன். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தில் நானும், பிரபுல் படேலும் கலந்து கொள்வோம்.
மகாராஷ்டிர அமைச்சரவையில் 14 காலியிடங்கள் உள்ளன. அமைச்சரவை விரிவாக்கம் முதல்வரின் தனிப்பட்ட உரிமை. அதுகுறித்து நான் பேசமாட்டேன். முதல்வர் ஷிண்டே தலைமையிலான அரசில் 28 கேபினட் அமைச்சர்கள் உள்ளனர். இணையமைச்சர்கள் யாரும் இல்லை. அமைச்சரவையில் அதிபட்சமாக 43 பேர் வரை இருக்கலாம். மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
மெகா கூட்டணி அரசில், அனைத்து தரப்பினரின் வளர்ச்சிக்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மூத்த தலைவர் சரத்பவார் எங்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்க கூடியவர். அவரது போட்டோ எனது அறையில் உள்ளது.
கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சரத்பவாரின் மனைவி, பிரதீபா பவாரை அவரது வீட்டில் சென்று பார்த்தேன். அரசியல் வேறு, குடும்பம் வேறு. குடும்பம் மற்றும் பாரம்பரியத்தை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக நாங்கள் அரசில் அங்கம் வகித்துள்ளோம். அதனால் யாருடைய எம்எல்ஏ பதவிக்கும் பிரச்சினை ஏற்படாது. அதை உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு துணை முதல்வர் அஜித் பவார் கூறினார்.