பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியிலிருந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தவும் எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை ஈடுபடுத்தியது. மீட்பு பணிகளில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் இந்திய ரயில்வேயுடன் இணைந்து விமானப்படை ஒருங்கிணைந்து செயல்படுவதாக, விமானப்படையின் கிழக்கு மண்டல தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும், காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கவும், கிழக்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு ராணுவ முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் அனுப்பப்பட்டுள்ளனர்.
ரயில் விபத்து நடந்த இடத்துக்கு சென்றடைந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘ரயில் விபத்து குறித்து உயர்நிலைக் குழு விசாரணை நடத்தும். ரயில் பாதுகாப்பு ஆணையரும் தனியாக விசாரணை நடத்துவார். தற்போது எங்கள் கவனம் மீட்பு மற்றும் நிவாரண பணியில் உள்ளது" என்றார்.