தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பணியாற்றி இன்று ஓய்வு பெறும் முதுமலை, மூர்த்தி கும்கி யானைகள்

By ஆர்.டி.சிவசங்கர்

ஊழியர்களுக்கு பணி ஓய்வுபோல, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் 58 வயதை பூர்த்தியடைந்த யானைகளுக்கு ‘ரிடையர்மென்ட்’ வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளான இன்று முதுமலையில் பணி ஓய்வு பெறுகின்றன முதுமலை, மூர்த்தி ஆகிய இரண்டு கும்கி யானைகள்.

1967-ம் ஆண்டு முதுமலை வனப்பகுதியில் 5 வயது குட்டியாக பிடிக்கப்பட்ட யானைதான் முதுமலை. அப்போது முதல் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை வளர்ந்த பிறகு நீண்ட தந்தங்கள், கம்பீரமான உடல் அமைப்பு, பாகன் சொல்லுக்கு கீழ்படிதல் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் மிக முக்கிய கும்கி யானையாக மாறியது முதுமலை.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை பிடிக்கும் பணியிலும், வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் கும்கி முதுமலை ஈடுபட்டிருக்கிறது.

இதுதொடர்பாக முதுமலை கும்கியை பராமரித்து வந்த முன்னாள் பாகன் மாறன் கூறும்போது, "ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முதுமலை கும்கி யானைக்கு, அந்த மாநில அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

என்னதான் பிரம்மாண்டமான உருவமாக இருந்தாலும், குடும்பத்தில் உள்ள குழந்தைகளோடுகூட முதுமலை கும்கி யானை மிகவும் அன்பாக பழகும். முதுமலை யானையுடன் பணிக்கு சென்ற அனைத்து இடங்களிலும் எங்களுக்கு தான் வெற்றி கிடைத்திருக்கிறது. காட்டு யானைகள் எவ்வளவு மூர்க்கத்தனமாக தாக்க வந்தாலும், தன் மீது அமர்ந்திருக்கும் பாகனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு முதுமலை பார்த்துக் கொள்ளும்" என்றார்.

தற்சமயம் வனத்துறையில் 55 ஆண்டு காலம் பணியில் ஈடுபட்ட முதுமலை கும்கிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.

கும்கி யானை மூர்த்தி கேரளா மற்றும் கூடலூர் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. 1990-களில் இந்த யானை செய்த செயல்களை கேரளா மற்றும் கூடலூர் பகுதியை சேர்ந்த மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். மக்னா யானையான மூர்த்தி, கேரளாவில் 10-க்கும் மேற்பட்டவர்களை கொன்ற நிலையில், கூடலூர் அருகே புளியம்பாறை, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு, 10-க்கும் மேற்பட்டவர்களை கொன்றது.

1998-ம் ஆண்டு பெரும் சிரமத்துக்கு இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி, மூர்த்தி யானையை வனத்துறையினர் பிடித்து முகாமில் சேர்த்தனர். அப்போது, புளியம்பாறை பகுதியில் இருந்து 5 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட மூர்த்தி யானையை, நடக்க வைத்தே தெப்பக்காடு முகாம் கொண்டு சென்றனர்.

யானை பிடிக்கப்பட்டபோது, அதன் உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததோடு, உடலில் இருந்து துப்பாக்கி தோட்டாக்களும் எடுக்கப்பட்டன. அவ்வாறு மூர்க்கத்தனமாக இருந்த மூர்த்தி யானை, தற்சமயம் தெப்பக்காடு முகாமின் மிகவும் சாதுவான யானையாக வலம் வருகிறது.

பாகன் இல்லாத நேரங்களில் குழந்தைகள்கூட மூர்த்தி யானை அருகே சென்று நிற்க முடியும். அந்த அளவுக்கு மனிதர்களோடு மிகவும் நெருங்கிவிட்டது. காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் கும்கி யானை மூர்த்தி பலமுறை ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

முகாமுக்கு பிடித்து வரும் காட்டு யானைகளை சாந்தப்படுத்தும் பணியிலும் மூர்த்தி ஈடுபடுத்தப்படும். கடந்த 25 ஆண்டுகளாக வனத்துறையில் பணிபுரிந்த மூர்த்தி யானைக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "தற்சமயம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள மூர்த்தி, முதுமலை ஆகிய இரண்டு கும்கி யானைகளுக்கும், இனிமேல் முகாமில் எந்த பணிகளும் வழங்கப்படாது. வழக்கம்போல, இந்த இரண்டு யானைகளையும் பராமரிக்கும் பணியில் பாகன்கள் ஈடுபடுவார்கள்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

இந்தியா

23 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்