இனி, பள்ளிகளில் இயற்கை விவசாயம்!

ஆரம்பித்த நாளிலிருந்து இப்போதுவரை, ‘இந்து தமிழ்’ நாளிதழ், ஒவ்வோர் ஆண்டும் வாசகர்களைத் தேடிச் சென்று வாசகர் விழாக்களைக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு புது முயற்சியாக விவசாயிகளைத் தேடிச் சென்று விழா நடத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 28-ம் தேதி ‘நிலமும் வளமும்’ இணைப்பிதழ் சார்பில் ‘இயற்கை வேளாண்மை திருவிழா’வை வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது.

‘கிரியேட்’ அமைப்பின் தலைவர் முனைவர் பி.துரைசிங்கம் தலைமை வகிக்க, சமூக அறிவியல் கல்லூரி செயலர் டி.வி.தர்மசிங் முன்னிலை வகிக்க, விழா இனிதே தொடங்கியது. வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் எனச் சமூகத்தின் பல தரப்பட்ட மக்கள் ஆர்வமாக வந்திருந்தனர்.

கூட்டமாகப் போனால் ‘கடன்’

இதில், சமூகச் செயற்பாட்டாளரும் திரைப்பட நடிகையுமான ரோகிணி, தொடங்கிவைத்துப் பேசினார்.

“முதலில் பெண்ணின் கையில்தான் விவசாயம் இருந்தது. அதுவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அவளுடைய கையிலிருந்து பறிக்கப்பட்ட பிறகுதான் விவசாயம், வியாபாரத்துக்குள் சென்று மாட்டிக்கொண்டது.  பெண்களையும் விவசாயத்துக்குள் கொண்டுவந்தால் மட்டுமே தொலைத்த நமது பாரம்பரிய விவசாயத்தை வென்றெடுக்க முடியும். அதற்கான ஆரம்பப் புள்ளியாக இளைய தலைமுறையை இயற்கை விவசாயத்துக்குள் கொண்டு வரவேண்டும்” என்றார்.

இயற்கை வேளாண்மைப் பயிற்சியாளர் கரு.சேவுக பெருமாள் பேசும்போது, “தற்போதைய அரசு தனி நபர்களுக்குக் கடன் கொடுக்க விரும்பவில்லை. திட்டங்கள், மானியங்கள் ஆகியவற்றையும் வழங்க விரும்பவில்லை. இந்த முடிவெடுத்து 3 ஆண்டுகளாகிவிட்டன. விவசாயிகள் குழுக்களாகவும் கம்பெனிகளாகவும் அமைப்புகளாகவும் செயல்படும்போது அவர்களுக்குக் கடன், திட்டங்கள், மானியங்கள் ஆகியவற்றை வழங்க அரசு முன் வருகிறது. அதனால், விவசாயிகள் தங்களுக்குள் உற்பத்தியாளர்கள் குழுக்களை ஏற்படுத்தி அரசிடம் கடன்பெற்றுச் சாதிக்கலாம்” என்றார்.

‘முளை’யிலேயே விளையும் பயிர்

‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஸ்ரீதர் பேசும்போது, “கேரளாவில் எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியால் உயிர்ப் பலிகள் ஏற்பட்டன. பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கேரள அரசு எண்டோசல்ஃபானைத் தடை செய்தது. அதன் பிறகுதான் அங்கு இயற்கை விவசாயம் தலையெடுக்க ஆரம்பித்தது.

கேரளாவில் அதற்கான முதல் முயற்சியாக ஆரம்பத்தில் 10 பள்ளிகளைத் தேர்வுசெய்து, அதில் காலியாக இருக்கும் இடங்களில் இயற்கை விவசாயத்தை ஆரம்பித்தோம். அதைப் பார்த்துப் பிரமித்துப்போன கேரள அரசு இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது. அரசு அலுவலகங்கள் தொடங்கி சிறைச்சாலைகள்வரை காலியாக இருக்கக்கூடிய இடங்களில் இயற்கை விவசாயம் நடக்கிறது.

தற்போது 6 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்கள் இயற்கை விவசாயம் செய்கிறார்கள். அதுபோன்ற சமூக மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்த மக்களும் விவசாயிகளும் முன் வரவேண்டும்” என்றார்.

விவசாயி ஆலங்குடி ஆர்.பெருமாள் பேசும்போது, “நான் ஒன்றரை ஏக்கர் கொண்ட சிறு விவசாயிதான். ஒரு போகம் நிலம்தான். காவிரியில் தண்ணீர் வந்தால்தான் விவசாயம். கூடுதல் மகசூல் கிடைக்க விவசாயிகள் பொதுவாக ஏக்கருக்கு 60 கிலோ நெல் விதைகளைப் பயன்படுத்தி நெருக்கமாக நாற்று நடுவார்கள். நெருக்கி நட்டால் நிறைய மகசூல் எடுக்கலாம் என்பது அவர்களுடைய கணக்கு. ஆனால், ஏக்கருக்கு 2 டன்தான் மகசூல் எடுப்பார்கள்.

iyarkaijpg

நானோ இடைவெளிவிட்டுத் தான் நடுகிறேன். ஏக்கருக்கு 10 கிலோ விதைகளை ஆரம்பத்தில் பயன்படுத்தினேன். எனக்கு 2 டன்னுக்கு மேல் மகசூல் கிடைத்தது. அதன் பிறகு ஏக்கருக்கு 5 கிலோ விதையிலிருந்து தற்போது ஏக்கருக்கு 1/4 கிலோவிதைகளைப் பயன்படுத்தி 2 டன்னுக்கு மேல் மகசூல் எடுக்கிறேன்” என்று சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

மீட்கப்படும் பாரம்பரியம்

‘கிரியேட்’ அமைப்பின் தலைவர் முனைவர் பி.துரைசிங்கம் பேசும்போது, “பஞ்சாப் பல்கலைக்கழகம் ஒன்று, ரசாயன உரப் பயன்பாட்டால் உணவு மூலம் தாய்பாலில்கூட விஷம் கலந்துவிட்டது என்றது. அதனால், நஞ்சு இல்லாத உணவை உற்பத்தி செய்வதைச் சவாலாக எடுத்துக்கொண்டுஇயற்கை விவசாயம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும். இதை ஒரு பிரசாரமாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்” என்றார்.

நெல் ஜெயராமன் பேசும்போது, “நமது நாட்டில் பசுமைப் புரட்சியின்போது இந்தியாவின் பாரம்பரிய நெல் ரக விதைகள் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. திருப்பி அவை குள்ள ரகப் பயிர்களாக நம்மிடமே திரும்பி வந்தன. அந்தக் குள்ள ரகப் பயிர்கள், ரசாயன உரம் கேட்டன, பூச்சிக்கொல்லி கேட்டன, களைக் கொல்லியும் கேட்டன. இப்படிப் பல்வேறு சுமைகளை விவசாயிகளிடம் அவை ஏற்படுத்தின.

தற்போது அந்தப் பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டுபிடித்து, மறு உற்பத்தி செய்கிறோம். அதைப் பயிரிட விவசாயிகள் ஆர்வம் கொண்டுள்ளனர். பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியவை. நோய் தீர்க்கக்கூடிய மாமருந்தாக உள்ளவை. ஒவ்வொரு பாரம்பரிய நெல் ரகத்திலும் இருக்கக்கூடிய சத்துக்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மெத்தப் படித்த இளைஞர்களெல்லாம் தற்போது இயற்கை விவசாயமும் பாரம்பரிய நெல் ரக சாகுபடியும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்” என்றார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE