தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள மூலிகை மரம், செடிகளில் கியூஆர் குறியீடு அடங்கிய பலகை பொருத்தும் பணியை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் தொடங்கி வைத்தார். 
சுற்றுச்சூழல்

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள அரிய வகை மூலிகை, மரங்கள் மீது கியூஆர் குறியீடு பொருத்தம்

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

பலர் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இம்மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவப் படிப்பு மாணவர்களின் கல்விக்காக சித்த மருந்து தயாரிக்க பயன்படக்கூடிய 350-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள், மரங்கள் கொண்ட தோட்டம் உள்ளது.

மாணவர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் இந்த மூலிகை மற்றும் மரங்கள் குறித்து எளிதில் அறிந்துகொள்ள மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அந்த வகையில் மருத்துவமனை வாளகத்தில் உள்ள அனைத்து வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடியின் மீதும் விரைவு துலங்கி எனப்படும் கியூஆர் குறியீடு அடங்கிய பலகைகளை பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கியூஆர் குறியீடை ஸ்கேன் செய்வதன் மூலம் மரத்தின் ஆங்கில பெயர், தமிழ் பெயர், தாவரவியல் பெயர், எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது, அதன் பயன்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆங்கிலம், தமிழில் தெரிந்துகொள்ள முடியும். மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆராய்ச்சி மாணவர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கியூஆர் குறியீடு பொருத்தும் பணியை தேசிய சித்த மருத்துவ நிறுவ இயக்குநர் மருத்துவர் ஜி.செந்தில்வேல் முன்னிலையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் தொடங்கி வைத்தார். இந்த பணி ஓரிரு வாரங்களில் செய்து முடிக்கப்படுமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT