Ice Bed | பனிப்பாறையில் உறங்கும் துருவக் கரடி: சிறந்த வன உயிரின புகைப்பட விருதை வென்றது

By செய்திப்பிரிவு

லண்டன்: பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படமாக (மக்கள் தேர்வு) தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரிட்டன் நாட்டை சேர்ந்த புகைப்படக்காரர் நிமா சரிகானி (Nima Sarikhani) வென்றுள்ளார்.

உலக அளவில் சுமார் 95 நாடுகளில் இருந்து மொத்தமாக 50,000 பேர் இதில் பங்கேற்றனர். அனைவரும் தங்களது கேமராவில் ஃப்ரீஸ் செய்த வன உயிரினங்களின் வாழ்விடத்தில் அழகியலுடன் புகைப்படங்களை எடுத்து அனுப்பி இருந்தனர். அதில் இருந்து சிறந்த 25 பதிவுகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் தான் நிமா எடுத்த, பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

“துருவக் கரடி ஒன்று நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்திற்கு வடக்குப் பகுதியில் எடுக்கப்பட்டது. உறங்குவதற்கு முன்பு சிறிய பனிப்பாறையில் தனக்கான படுக்கையை கரடி செதுக்கியது.

அடர்ந்த மூடுபனியில் துருவக் கரடிகளைத் தேடி மூன்று நாட்கள் செலவிட்டேன். நான் சென்ற கப்பலின் திசையை மாற்ற முடிவு செய்தேன். அதன்படி பனி அதிகம் இருக்கும் இடத்துக்கு சென்றேன். அங்கு வயதில் இளைய மற்றும் மூத்த ஆண் துருவக் கரடிகளை பார்த்தோம். சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்தோம். அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த இள வயது கரடி சிறிய பனிப்பாறையின் மீது ஏறி, தனது வலுவான பாதங்களைப் பயன்படுத்தி, தனக்கென ஒரு படுக்கையை செதுக்கியது. அதற்கு நகங்களை பயன்படுத்தியது. பின்னர் தூங்கியது. அதை படமாக எடுத்தேன்” என நிமா தெரிவித்தார்.

இந்தப் படம் இயற்கையின் அழகையும், அச்சுறுத்தலையும் ஒரு சேர வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது விலங்குக்கும் அதன் வாழ்விடத்திற்கும் இடையிலான பிணைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் அந்தப் பகுதி எதிர்கொள்ளும் சூழலும் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளதாக சொல்லியுள்ளனர்.

துருவக் கரடி: துருவக் கரடிகள் பெரும்பான்மையான நேரத்தை ஆர்க்டிக் கடலில் மிதக்கும் பனிப்பாறைகளிலேயே கழிக்கின்றன. ஏனென்றால் இவை உணவுக்குக் கடலில் வாழும் விலங்குகளையே நம்பியிருக்கின்றன.

குளிரைத் தாங்கும் விதத்தில் துருவக் கரடிகளுக்குத் தடிமனான ரோமங்கள் உடல் முழுவதும் இருக்கின்றன. இவை பார்க்கும்போது வெள்ளையாகத் தெரிந்தாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. ஒளி ஊடுருவக்கூடிய நிறமற்ற ரோமங்களாக உள்ளன. ஒளி ரோமங்களில் பிரதிபலிப்பதால் வெள்ளையாகக் காட்சியளிக்கின்றன.

காலநிலை மாற்றம் துருவக்கரடிகள் உயிர் வாழ்வதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள கடல் பனி பேரளவு உருகி வருகிறது. இதனால் துருவக் கரடிகள் அழிந்து வருகின்றன. இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தி துருவக் கரடிகளைப் பாதுகாப்பதற்கு ஆண்டுதோறும் பிப்.27-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச துருவக் கரடி நாளாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

மேலும்