பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அமமுகவுக்கு பொதுச் சின்னமான குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, மக்களவைத் தேர்தல், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட வசதியாக அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார்.
அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். நாங்கள் தேர்தலை சந்திப்பதற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுச் சின்னம் ஒதுக்கப்படும். பதிவு செய்யப்படாத கட்சிகள் குழுவாகத்தான் கருதப்படும். அதுபோன்ற கட்சிகளுக்கு சுயேச்சை சின்னம்தான் ஒதுக்கப்படும். அமமுக பதிவு செய்யப்படாத கட்சிதான். எனவே, அக்கட்சிக்கு பொதுச் சின்னமான குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அதுதொடர்பான ஆவணங்கள் இருக்கிறதா” என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், “தற்போது கைவசம் ஆவணங்கள் இல்லை” என்று தெரிவித்தார். அதனால் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர். இன்று முதல் வழக்காக இது விசாரிக்கப்படும் என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தினகரன் கூறும்போது, “எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால், எங்கள் வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவர். அவர்கள் அதற்கான வேட்பு மனுவையும் தயாராக வைத்துள்ளனர். தனித்தனியாக சின்னம் கொடுத்தாலும், அதைச் சரியாக பார்த்து மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்” என்றார்.