மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என ஊகத் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தமது தாயாரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலிக்கு பிரியங்கா வருகை தந்தார்.
பின்னர், அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிர்வாகி ஒருவர், பிரியங்காவை ரேபரேலி தொகுதியில் போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு அவர், "ஏன் ரேபரேலியில் போட்டியிட வேண்டும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியில் நான் போட்டியிடக் கூடாதா?"என புன்னகைத்தவாறே கேள்வியெழுப்பினார். மேலும், கட்சித் தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் பிரியங்கா காந்தி கூறினார்.
இந்நிலையில், அயோத்தியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலாக, விவசாயிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் கடன் பிரச்சினையை தீர்க்க சிறிய அளவு முயற்சியை கூட அவர் செய்யவில்லை. இதனால், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
பிரதமர் மோடிக்கு விவசாயிகள் குறித்து அக்கறை கிடையாது. நாட்டில் உள்ள பெரும் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மீது மட்டுமே அவருக்கு அக்கறை உள்ளது. அவர்களின் நலன்களுக்காகவே பல்வேறு திட்டங்களை மோடி செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு விவசாயிகளுக்கு எதிராகவும், செல்வந்தர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் பாஜக அரசை இந்த தேர்தலில் மக்கள் தூக்கியெறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.