தீட்சிதர்களுடன் விரோதம் கிடையாது: திருமாவளவன்

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தீட்சிதர்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரிக்கும் போது, தீட்சிதர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித முரண்பாடு இல்லை என தெரிவித்தார்.

சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுர வாயில் வழியாக வந்த போது, பொது தீட்சிதர்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருமாவளவன் சிற்றம்பல மேடையேறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேதஸ்ரீமந் நடராஜப் பெருமானை தரிசித்தார். பொதுதீட்சிதர்தள் சிறப்பு தீபாராதனை செய்து, திருமாவளவனனுக்கு பிரசாதம் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து கோயில் பொதுதீட்சிதர்களின் அலுவலகத்திற்கு சென்று தீட்சிதர்களின் கமிட்டி நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்திய திருமாவளவன்,கோயில் வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிவுசெய்தார்.

பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது: "2004, 2009 ஆகிய தேர்தல்களின் போது நடராஜர் கோயிலில் வணங்கி, ஆதரவு திரட்டினேன். தீட்சிதர்கள் என்னை அழைத்துச்சென்று தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கினர். அதேபோன்று இத்தேர்தலிலும் நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு, ஆதரவு திரட்ட வந்தேன். தீட்சிதர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.

மனிதநேயத்திற்கும், உறவுகள் மேம்படவும் ஆன்மீகம் அடிப்படையாக திகழ்வதால், நான் கோயிலுக்குள் இருக்கும் கடவுளை வணங்குகிறேன். அனைத்து கோயில்களையும் அரசுடமையாக்க வேண்டும் என்பது எனது கொள்கை, அதன்படி நடராஜர் கோயிலை அரசு ஏற்ற போது ஆதரவு தெரிவித்தேனே தவிர, எனக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்தவித முரண்பாடும் கிடையாது" என்றார் திருமாவளவன்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE