நரேந்திர மோடி உள்பட பாஜக வேட்பாளர்களின் பிரச்சார செலவு ரூ.5,000 கோடி என்றும், அதில் பெருமளவு கருப்பு பணம் என்றும் மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம்சாட்டினார்.
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கபில் சிபல் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவு செய்துள்ள தொகை ரூ.5000 கோடி. தேர்தல் தேதி பிரச்சாரத்திற்கு முன்னதாகவே குஜராத் மாடல் குறித்து பரப்ப அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் செய்த செலவு சில நூறு கோடியாகும். அவரின் உத்தரப் பிரதேச பிரச்சாரத்திற்கு மட்டும் ரூ.300 கோடி செலவு செய்யப்பட்டது.
மேலும், அவரது பெங்களூரு பிரச்சாரத்திற்கு ரூ.20 கோடியும், லக்னோ பிரச்சாரத்திற்கு ரூ.40 கோடியும் செலவு செய்யப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாகவே இவ்வளவு செலவுகள் என்றால், மார்ச் 5-ம் தேதிக்கு பிறகு மேற்கொண்ட செலவுகள் எந்த அளவில் இருக்கும் என்பது தெரியவில்லை.
மோடியின் பிரச்சார செலவுகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், இவருக்கு எப்படி இந்த நிதி எல்லாம் கிடைக்கிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இதில் பெருமளவில் கருப்புப் பணம் புழங்குவதால்தான் மோடியும் அத்வானியும் கருப்புப் பணம் குறித்து பேசுவதே இல்லை.
இவர்களுக்கு நிதி அளித்து வருபவர்கள் எதையும் எதிர்ப்பாராமலா இதனை எல்லாம் செய்வார்கள்? நிதி அளிக்கும் பணக்காரர்கள் பெரிய அளவில்தான் எதிர்ப்பார்ப்பார்கள். இந்தக் கட்சி வெறும் பணக்கார்களுக்கான கட்சி, பணக்கார்களால் நடத்தப்படும் கட்சி.
கருப்புப் பணத்தை பிரச்சாரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் இந்தக் கட்சி, எப்படி காங்கிரஸ் மீது கருப்புப் பண புகார்களை தெரிவிக்கலாம் என்று புரியவில்லை.
நாடு முழுவதும் மொத்தம் 15,000 விளம்பர பலகைகளை பாஜக உபயோகப்படுத்தி உள்ளது. இதற்கான செலவு மட்டும் ரூ.2,500 கோடி ஆகும். தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ரூ.800 முதல் ரூ.1,200 கோடிகள் செலவாகி உள்ளது. மேலும் பிரச்சாரத்திற்காக சிறப்பு ரயில்கள், ஆயிரக்கணக்கான பேருந்துகள், கார்கள், 30 அடி உயரத்தில் ஒளிர்மிகு பதாகைகள் என இவற்றை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடிகள் வழங்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரணையை மேற்கொண்டால், அது அவ்வளவு எளிதில் முடிந்து விடாது. இருப்பினும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் இது குறித்து உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என்றார் கபில் சிபல்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா கூறும்போது, "நரேந்திர மோடி பிரச்சாரத்திற்காக செலவாகி உள்ள ரூ.10,000 கோடிகளில் 90 சதவீதம் கருப்புப் பணம் என்றும். இதுவரை நான் எந்த ஒரு நபருக்கும் ஊடகங்கள் இந்த அளவில் விளம்பரங்களை எய்ததாக நான் அறியவில்லை. இப்படி இருக்கையில் கருப்புப் பணத்தை பாஜக எப்படி ஒழித்திடும்?" என்றார் அவர்.