”ஜூலை 15-க்குள் வகுப்புகள் தொடங்க திட்டம்” - தமிழக வேளாண் பல்கலை. துணைவேந்தர் கீதாலட்சுமி

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கடந்த ஆண்டுபோல் இளநிலை சேர்க்கையில் தாமதம் ஆகாது; ஜூலை 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெ.கீதாலட்சுமி கோவையில் இன்று (ஏப்.19) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1958-ம் ஆண்டு முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. இப்படிப்புகளை தற்போது வரை திறம்பட நடத்தி வருகிறோம்.

முதுநிலையில் கடந்தாண்டு 32 படிப்புகள் மட்டுமே இருந்தன. நடப்பாண்டு பெரியகுளம் கல்லூரியில் போஸ்ட் ஹார்வஸ்ட் டெக்னாலஜி என்ற படிப்பை புதியதாக தொடங்கியுள்ளோம். இப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகைகளையும் வழங்கி வருகிறோம். கடந்தாண்டு இளநிலை பிரிவில் மாணவர் சேர்க்கை தாமதம் ஆனது. நடப்பாண்டு அனைத்து சேர்க்கையையும் விரைவாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி, மே 7-ம் தேதி இளநிலை பிரிவில் சேர்க்கைக்கான போட்ரல் செயல்படத் தொடங்கி விடும். குறிப்பிட்ட நாட்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடத்தி, சேர்க்கை முடித்து, ஜூலை 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். பின்னர், வருபவர்களுக்கு கட் ஆஃப் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இளநிலை சேர்க்கை தொடர்பாக அந்த சமயத்தில் விரிவாக தெரிவிக்கப்படும்.

மேலும், வேளாண் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டமேற்படிப்பு பயிலகத்தின் சார்பில், 11 கல்வி வளாகங்களில் 33 துறைகளில் முதுநிலை படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்டப்படிப்பையும் வழங்கி வருகிறோம். நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை இன்று (ஏப்.19) தொடங்கியது. நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://admissionsatpgschool.tnau.ac.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் வரும் மே மாதம் 15-ம் தேதி நள்ளிரவு 11.59-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த படிப்புகள் முடித்த மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புக்கும், முதுநிலையில் வேளாண்மை, தோட்டக்கலை, எம்.டெக் (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்புக்கும் விண்ணப்பிக்கலாம். முதுநிலை படிப்புக்கு விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ் (டிசி) இருந்தால் அதை வைத்து விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் கடைசி பருவத்தேர்வின் மதிப்பெண் பட்டியல் வைத்து விண்ணப்பிக்கலாம். ஆனால், இவர்கள் சேர்க்கையின் போது,மாற்றுச்சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். முனைவர் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை பிரிவின் புரவிஷனல் சான்றிதழ் வைத்தும், முதல் வருடம் மதிப்பெண் பட்டியல் வைத்தும் விண்ணப்பிக்கலாம்.

இவர்களும் சேர்க்கையின் போது புரவிஷனல் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதன் பின்னரே, மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 mins ago

மாவட்டங்கள்

33 mins ago

உலகம்

38 mins ago

தமிழகம்

43 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்