சென்னை: கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு கூடுதலாக 40 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2023-24ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கோவையில் இன்று (பிப்.17) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாநில திட்டக்குழு உறுப்பினர் உட்பட மருத்துவ வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் வகையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லும் வகையில் ஏராளமான நபர்கள் பங்கேற்று மிக சிறந்த வகையில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் அமல்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று கருதுகிறோம். இது மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதல் முயற்சி மற்றும் முன்மாதிரியான முயற்சி. பல்வேறு துறை வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று எதிர்காலத்தில் மக்கள் நல்வாழ்வை முன்னெடுத்து செல்வதற்கு இது வழிவகுக்கும் என்று கருதுகிறோம்
குறிப்பாக புற்றுநோய், காசநோய், தொழுநோய், சிறு குழந்தைகளுக்கும் இன்றைக்கு வருகின்ற நீரிழிவு நோய் என்கின்ற வகையில் பல்வேறு விஷயங்கள் பல தரப்பிலும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளுக்கான தீர்வாகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இக்கூட்டம் பெரிய அளவில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இத்துறையின் சார்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவே மக்கள் நல்வாழ்வுத் துறையில் செயல்படுத்துகின்ற திட்டங்கள் குறித்து இன்றைக்கு வியந்து பார்க்கிற வகையில் திட்டங்களை முதல்வர் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
110 அறிவிப்பில் 708 மருத்துவமனைகள் தமிழகத்தில் புதிதாக அமையும் என்று வெளியிட்டு அதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இன்றைக்கு கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கும் நிலையில் இருக்கிறது அதற்கான மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் அந்த மருத்துவமனைகளும் தமிழகத்தில் திறந்து வைக்கப்பட இருக்கின்றது. அடுத்த நிதி நிலை ஆண்டில் வேறு என்னவெல்லாம் புதிய திட்டங்களை அறிவிக்கலாம் என்று கருத்துகள் கேட்கப்பட்டு பெறப்பட்டு இருக்கின்றது.
வரலாற்றிலேயே 750 புதிய வாகனங்கள் 108 சேவைக்காக வாங்கப்பட்டுள்ளது. மேலும், காச நோயை கண்டறிவதற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே வசதியுடன் கூடிய 23 வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரப்பட்டுள்ளது. வாகனங்களின் பயன்பாடு என்பது கடந்த ஒன்றரை வருடங்களில் அதிக அளவில் வாங்கி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நிதிநிலை அறிக்கையில் முதல்வர் 4308 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் பகுதிவாரியாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் 4000 செவிலியர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். இதில் கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 40 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு பணியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.