கல்வி

பொறியியல் படிப்பில் சேர கணிதம் கட்டாயம் இல்லை: ஏஐசிடிஇ புதிய விதிமுறை

செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு கணிதப் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் 2022-23 கல்வி ஆண்டுக்கான அங்கீகார வழங்கலுக்கான விதிமுறைகள் தற்போது வெளியிட்டுள்ளன. அதில், ‘பொறியியல் கல்வியில் கம்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் பாடம் படித்திருப்பது கட்டாயம் இல்லை. அதேபோல, வேளாண், கட்டிடக்கலை, உயிரி தொழில்நுட்பம், உணவு மேலாண்மை, தோல் தொழில்நுட்பம், பிரின்ட்டிங் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு கணிதப்பாடம் கட்டாயம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பொறியியல் படிப்புகளில் சேர, பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கணிதப் பாடம் கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பு, தரமற்ற பொறியாளர்கள் உருவாகவே வழிசெய்யும் என்று கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே கூறும்போது ‘‘அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமவாய்ப்பை வழங்கவே இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்லூரிகளில் முதல் 2 பருவங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் அடிப்படை பிரிட்ஜ் கோர்ஸ் முறையில் கற்றுத் தரப்படும். எனவே, மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது’’ என்றார்.

SCROLL FOR NEXT