கல்வி

போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது: வாக்கூர் மாணவர்கள் பள்ளிக்கு வர மறுப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த கருணாகரன் (32) என்பவர், பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் சமூக நல அலுவலர் நெப்போலியன் புகார் அளித்தார். அதன்பேரில் நவ. 28-ம் தேதி இரவு, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கருணாகரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆசிரியர் மீது தவறான புகார் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வாக்கூர் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து, ஆசிரியரை விடுவிக்கக் கோரி மனு அளித்தனர். இந்த நிலையில், நவ. 29-ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கடந்த சனி, ஞாயிறுக் கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும், திங்கள் கிழமை மழை காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது. ஆனால், பெற்றோரின் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் நேற்றும் பள்ளிக்கு வரவில்லை. இது போன்ற சர்ச்சைகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்று பள்ளி ஆசிரியர்கள் கிராம முக்கியஸ்தர்களிடம் பேசினர். இதைத் தொடர்ந்து இன்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக பெற்றோர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உறுதியளித்தனர்.

SCROLL FOR NEXT