திருவள்ளூர்: போலி ஆவணம் மூலம் ரூ.80 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்க முயன்றது தொடர்பாக, பெண் உட்பட 3 பேரை ஆவடி நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, கோயம்பேடு, புதிய காலனியை சேர்ந்த முரளி என்பவரது மனைவி விஜயராணி ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகார் மனு: திருவள்ளூர் மாவட்டம், வெள்ளானூர் கிராமம், ஆர்ச் அந்தோணியார் நகரில் உள்ள மனை எண்.849-ல் 2,400 சதுர அடிநிலத்தை விஜயராணி தனது தாயார் சரோஜா, சகோதரி அமுலு மற்றும் அவரது கணவர் ராம மூர்த்தி பெயரில் ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்தார்.
இந்நிலையில், கடந்த 2017-ம்ஆண்டு விஜயலட்சுமி என்ற போலியான நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து, முழு நிலத்தையும் ராமமூர்த்தி, தனது மனைவி அமுலு பெயரில் போலியான ஆவணம் தயாரித்து தான செட்டில்மென்ட் செய்தார். பின்னர், 2020-ல் ராம மூர்த்தி தனது மகன்கள் மனோஜ் மற்றும் தினேஷ் ஆகியோருக்கு தலா 1,200 சதுர அடி இடத்தைப் பிரித்துக் கொடுத்து பத்திரப் பதிவு செய்தார்.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும் ”என குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸார் இது தொடர்பாக, மோசடியில் ஈடுபட்ட ராம மூர்த்தி, விஜயலட்சுமி மற்றும் மனோஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.