காயமடைந்த ஆறுமுகம் 
க்ரைம்

காரைக்குடி | பைக்கை திருட முயன்றவர்களை தடுத்த வியாபாரிக்கு வெட்டு

செய்திப்பிரிவு

காரைக்குடி: காரைக்குடி அருகே பைக் திருட்டை தடுத்த வியாபாரியை திருடர்கள் வெட்டினர். வியாபாரியின் மனைவி கூச்சலிட்டதை அடுத்து அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

காரைக்குடி அருகே பூவாண்டிபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர் தனது மனைவி லோகம்மாளுடன் சேர்ந்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆவுடைபொய்கை விலக்கில் உணவகம் நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கியுள்ளனர்.

நேற்று அதிகாலை ஆறுமுகம் கடையை திறந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆறுமுகத்திடம் சிகரெட் கேட்டனர். சிக ரெட்டை எடுக்கச் சென்றபோது, கடை முன்பாக நிறுத்தப் பட்டிருந்த ஆறுமுகம் மகனின் ரேஸ் பைக்கை மூன்று பேரும் திருட முயன்றனர்.

அவர்களை ஆறுமுகம் தடுத்தபோது, வாளால் அவரது கையை வெட்டினர். இதைப் பார்த்த ஆறுமுகத்தின் மனைவி கூச்சலிட்டதால், அவ்வழியாகச் சென்றவர்கள் வந்தனர். இதையடுத்து, திருடர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். காயமடைந்த ஆறுமுகம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து குன்றக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். காரைக்குடி பகுதிகளில் ஆயுதங்களுடன் பைக் திருடர்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT