சென்னை: இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.69.61 லட்சம் மதிப்பிலான 1,387 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் துறையின் கூடுதல் ஆணையர் கே.பி.ஜெயகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவிலிருந்து வந்த பெண் பயணி ஒருவரை சோதனை செய்தனர். அப்போது அவர் ரகசியமாக மறைத்து எடுத்து வந்த ரூ.28.70 லட்சம் மதிப்பிலான 572 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில், ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புவிலிருந்து வந்த பெண் பயணி ஒருவரை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த ரூ.40.90 லட்சம் மதிப்பிலான 815 கிராம் எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் ரூ.69.61 லட்சம் மதிப்பிலான 1,387 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.