சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இதில், அவரது உடலில் ரூ.56.94 லட்சம் மதிப்பிலான, ஒரு கிலோ 110 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர்.
இதேபோல, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த பயணி ஒருவர், மறைத்து கொண்டுவந்த 2 அரிய வகை குரங்குகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அந்தப் பயணி, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.