மதுரை: திருச்சியை சேர்ந்த பழைய கார் விற்பனையாளர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேரை போலீ ஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், கீழதேவ தானம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவர் , பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவருக்கும், மதுரை திலகர்திடல் பகுதியைச் சேர்ந்த கார் விற்பனை தரகர்கள் முஸ்தபா, உஸ்மான், கண்ணன் மற்றும் ராமநாதபுரம் வேலு சேகர் ஆகியோருக்கும் இடையே கார் விற்பனை தொடர்பாக பணம், கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 26-ம் தேதி மதுரை டவுன் ஹால் ரோட்டிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த அருள்முருகன் காரில் கடத்தப்பட்டார். பின்னர் ராமநாதபுரத்தில் வேலு சேகருக்கு சொந்தமான தோட்டத்தில் அவரை அடைத்து வைத்து பணம் கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து தப்பிவந்த அருள் முருகன், மதுரை திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், முஸ்தபா உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.