சென்னை: சென்னை மந்தைவெளி ராஜாகிராமணி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (73). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்டார். இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். தனது சொத்துகளை பிள்ளைகள் 4 பேருக்கும் கவுசல்யா எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
சகோதரிக்கு சொத்தில் பங்கு கொடுத்தது, இளைய மகன் கோபிநாத்துக்கு பிடிக்கவில்லையாம். இதனால், சகோதரிக்கு கொடுத்த சொத்துகளை திரும்ப எழுதி வாங்கும்படி, தாயை கோபிநாத் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வேதனை அடைந்த மூதாட்டி நேற்று முன்தினம் மாலை வீட்டின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தகவல் அறிந்து வந்த பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பின்பக்கமாக பால்கனி மீது ஏறி அங்கிருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டார். ஆய்வாளர் ராஜேஸ்வரியை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.