க்ரைம்

ஆன்லைன் மூலம் வெங்காயம் வாங்கி மோசடி: பெண்ணைக் கைது செய்து போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

ஈரோடு: ஆன்லைன் மூலம் 11 டன் வெங்காயம் வாங்கி, பணம் தராமல் மோசடி செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையத்தைச் சேர்ந்த நிறுவனத்திடம், கடந்த மார்ச் மாதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து, ரூ.2.17 லட்சம் மதிப்பிலான11.45 டன் வெங்காயம் வாங்கி உள்ளார். இதற்கான தொகையைச் செலுத்தாமல் ரேவதி காலம் தாழ்த்திய நிலையில், நிறுவன உரிமையாளர் சித்தோடு போலீஸில் புகார் செய்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், ஆன்லைன் மூலம் வாங்கிய வெங்காயத்தை, வேறு ஒரு வியாபாரிக்கு பாதி விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரேவதியைக் கைது செய்தனர்.

மேலும், தன்னை மொத்த வியாபாரி என பலரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை கடனுக்கு வாங்கி, அதனை கிடைத்த விலைக்கு விற்று ரேவதி மோசடி செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரேவதியிடம் ஏமாந்தவர்கள் புகார் அளித்தால், அதுகுறித்து விசாரிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT