கேரளா | மூட நம்பிக்கையால் மீண்டும் ஒரு கொலை? - கஷாயத்தில் விஷம் கொடுத்து காதலனை கொன்ற காதலி

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: அடுத்தடுத்த கொலைகளால் அதிர்ந்து போயுள்ளது கடவுளின் தேசமான கேரளம். இம்மாத தொடக்கத்தில், நரபலி என்ற பெயரில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொன்று அவர்களின் நர மாமிசத்தை சமையல் செய்து சாப்பிட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த வாரம் பாலூர் என்ற இடத்தில் காதலை ஏற்க மறுத்ததால் 23 வயது பெண்ணை அவரது நண்பனே கொலை செய்த சம்பவம் தெரிந்தது.

இதோ ஒரு வாரத்திற்குள் மூன்றாவது கொலை . இம்முறை திருவனந்தபுரம் பாறசாலை என்ற இடத்தில் கொலை சம்பவம். கொல்லப்பட்டது 23 வயது இளைஞன் ஷாரோன் ராஜ். விஷம் கொடுத்து கொன்றது ஷாரோன் உயிருக்கு உயிராக காதலித்த காதலியான களியக்காவிளை ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா. இந்தக் கொலையும் கொலைக்கு முன் பின் நடக்கும் சம்பவங்களும் கேரளத்தை ஒரு க்ரைம் மோடிலேயே வைத்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம், பாறசாலையைச் சேர்ந்த மாணவன் ஷாரோன் ராஜ். 23 வயதாகும் இவரும் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவரும் காதலித்துள்ளனர். இந்த நிலையில் கிரீஷ்மா கடந்த 14-ம் தேதி ஷாரோன் ராஜைத் தனது வீட்டுக்கு அழைக்க, தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கொடுத்த கஷாயம் மற்றும் ஜூஸை குடித்த ஷாரோன், காதலியின் வீட்டை விட்டு வெளியே வந்து வாந்தி எடுத்திருக்கிறார். சிறிதுநேரத்தில் வீட்டுக்குச் சென்றபின் அவரின் உடல்நிலை இன்னும் மோசமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஷாரோன் ராஜின் வயிற்றுப்பகுதியிலுள்ள உறுப்புகள் செயலிழக்க, கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

உயிரிழக்கும் முன் மருத்துவமனையில் கிரீஷ்மா வீட்டில் இறுதியாக ஜூஸ் குடித்ததாக ஷாரோன் தனது தந்தையிடம் சொல்லியதன் அடிப்படையில் அவரின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீஸில் புகார் கொடுக்க விவகாரம் பூதாகரம் ஆனது.

ஷாரோன் ராஜும் கிரீஷ்மாவும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாகவும், இதற்கிடையில் கிரீஷ்மாவுக்கு வேறு நபருடன் நிச்சயம் ஆனதால் ஷாரோனை விட்டு விலக அவர் முற்பட்டதும் புகாரில் சொல்லப்பட்டது. இதன்பின் கேரள குற்றப்பிரிவு போலீஸ் நடத்திய விசாரணையில் தனது மாமா பயன்படுத்திவந்த களைக்கொல்லி பூச்சிமருந்தை கஷாயத்தில் கலந்து ஷாரோனுக்கு கொடுத்ததை கிரீஷ்மா ஒப்புக்கொண்டார்.

வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயமானதால் ஷாரோன் உடனான உறவை முறித்துக் கொள்ள விரும்பிய கிரீஷ்மா அவரை விட்டு ஒதுங்கியுள்ளார். ஆனால் ஷாரோன் அவர்களின் உறவில் விடாப்பிடியாகவும் பிடிவாதமாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், காதலித்த போது எடுத்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை ஷாரோனின் மொபைலில் இருந்ததால் கிரீஷ்மா அவரை கொலை செய்யும் முடிவுக்கு சென்றிருக்கலாம் என்று கேரள குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மூடநம்பிக்கையால் கொலை?: நவம்பர் 2022க்கு முன்னர் தனது முதல் கணவருக்கு மரணம் ஏற்படும் என்று ஜாதகத்தில் சொல்லப்பட்டுள்ளதாக கிரீஷ்மா பல முறை ஷாரோனிடம் சொல்லியதாக ஷாரோனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ஜாதக நம்பிக்கைப்படி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கொலையில் கிரீஷ்மாவின் தாய் மற்றும் மாமாவுக்கு தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் நடந்த விசாரணையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கு தினம் ஒரு திருப்பதுடன் சென்றுகொண்டுள்ளது.

இதனிடையே, ஒருவருடத்துக்கும் மேலான காதல், இப்படியான ஒரு முடிவை தேடும் என்று சிந்தனையில்கூட நினைக்காத ஷாரோன் ராஜ் இறக்கும் தருவாயிலும் காதலியை நேசித்துள்ளார். விஷத்தின் வேதனையால் உடல் இறந்துகொண்டிருக்கும் வேளையிலும் 'நீ கவலைப்படாதே.. என்னை மறக்காமல் இருபோதும்' என்று காதலை வெளிப்படுத்திய விடைபெற்ற அவரின் போன் கால்களும், மெசஜ் சாட்களும் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

58 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்