சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் கொடுங்காயம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 93 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த 3 மாதங்களில் பதிவான அடிதடி, கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதன்படி காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 1.8.2022 முதல் 25.10.2022 வரை, சென்னை பெருநகரில் பதிவான அடிதடி மற்றும் கொடுங்காயங்கள் ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க நேற்று (27ம் தேதி ) ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையில், 01.08.2022 முதல் 25.10.2022 வரை அடிதடி மற்றும் கொடுங்காயம் விளைவித்த குற்றங்கள் தொடர்பாக பதிவான 369 வழக்குகளில் ஏற்கெனவே 604 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்த நிலையில், ஒரு நாள் சிறப்பு சோதனையில், மேற்படி 369 வழக்குகளில் தொடர்புடைய 93 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.