கோவை: இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (அக்.20) தீர்ப்பளித்துள்ளது.
கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (27). தனது தந்தை நடக்க முடியாமல் இருந்ததால் அவரது பால் வியாபரத்தை ரகுநாதன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், 2019 ஜூன் 23-ம் தேதி ரகுநாதனின் தந்தையை பார்க்க வந்த உறவினர், தனது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் அங்கேயே தங்கியுள்ளார்.
அன்றைய தினம் இரவு செல்போனில் ஆபாச படம் பார்த்த ரகுநாதன், மறுநாள் காலை பால் வியாபரத்துக்கு எழுந்துள்ளார். அப்போது தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். குழந்தை சத்தம் போட்டதால் வாயை மூடி அழுத்தியுள்ளார். இதில் குழந்தை மயக்கம் அடைந்துள்ளது. மீண்டும் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் பிடிபடுவோம் என பயந்து, ரகுநாதன், குழந்தையை அருகில் இருந்த கிணற்றில் வீசியுள்ளார். காலையில் குழந்தையை காணாததால், உறவினர்கள் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். அப்போது, குழந்தை கிணற்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் முதலில் சந்தேகப் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் முன்பு ஜூன் 26-ம் தேதி ஆஜராகி குழந்தையை தான் கொன்றதாக ரகுநாதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீஸாரிடம் விஏஓ ஒப்படைத்தார். பின்னர், கொலை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு (போக்சோ) சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரகுநாதனை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.குலசேகரன் இன்று (அக்.20) தீர்ப்பளித்தார். அதில், குழந்தையை கொலை செய்த ரகுநாதனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தோடு, உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.