சென்னை: செல்போன் பறிக்க முயன்றபோது மின்சார ரயிலிலிருந்து தவறி விழுந்த கொள்ளையன் கால் துண்டாகியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி - கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்புப் பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம்போல் மெதுவாகச் சென்றது.
அப்போது, அந்த பகுதியில் கூட்டாளிகளுடன் தயாராக நின்றிருந்த இளைஞர் ஒருவர் ரயில் படிக்கட்டில் தாவி, அதில் பயணம் செய்யும் பயணியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்த அந்த இளைஞரின் இடது கால் மீது சக்கரம் ஏறி துண்டானது. மேலும், வலது கால் முற்றிலும் நசுங்கி சதை கிழிந்த நிலையில் சேதம் அடைந்துள்ளது. உடனே, அந்த இளைஞரை அவரது நண்பர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர் ராம் நாயக்கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கால் துண்டான இளைஞர் பழைய வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரி பகுதியைச் சேர்ந்த நவீன் (24) என்பதும், இவர் ஓடும் ரயிலில் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இது தொடர்பாக இவர் மீது கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன என்றனர். இது ஒருபுறம் இருக்க நேற்றுமுன்தினம் (அக். 5) இரவு 7 மணியளவில் நவீன் வேலை முடித்து மது போதையில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டதால்தான் கால் முறிவு ஏற்பட்டது என அவரது நண்பர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே எஸ்பி அதிவீர பாண்டியன் கூறும்போது, "ஓடும் ரயிலில் பயணிகள் ஏறவோ, இறங்கவோ கூடாது. ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது. மீறி பயணம் செய்தாலும் அங்கு வைத்து செல்போன் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு செல்போனை பயன்படுத்தக் கூடாது. ரயிலில் பயணிக்கும்போது அளவுக்கு அதிகமான நகை அணிய வேண்டாம் எனத் தொடர்ந்து அறிவுரைவழங்கி வருகிறோம். இதை வலியுறுத்தி ரயில் நிலையங்கள், நடைமேடைகளில் ரயில்வே போலீஸார் தினமும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்" என்றார்.