பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் 
க்ரைம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிறுத்தையின் தோல் பறிமுதல்: ரயில்வே போலீஸார் விசாரணை

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தையின் தோலை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பன்பராக் போன்ற போதை பொருட்கள், மதுபுட்டிகள் போன்றவை ரயில் மூலம் கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் இரவு பகலாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்று காலை விழுப்புரம் ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையில் தலைமை காவலர் வினோத், தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி உள்ளிட்டோர் ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில் போட்டிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு வங்க மாநிலம் கரக்பூரிலிருந்து விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்த அதி விரைவு ரயிலில் ரயில்வே போலீஸார் ஏறி சோதனையிட்டனர்.

அதில் அந்த ரயிலின் பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் சாக்கு பை ஒன்று கிடைத்தது. அதனை போலீஸார் சோதனையிட்டனர். அந்த பையில் சிறுத்தையின் தோல் இருப்பது கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிறுத்தை தோலை பறிமுதல் செய்து ரயில்வே காவல் நிலையத்துக்குகொண்டு சென்றனர்.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோலை ரயிலில் கடத்தியவர்கள் யார்? எங்கிருந்து? எங்கு? கடத்த முயன்றனர் உள்ளிட்டவை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணைநடத்தி வருகின்றனர். இந்த சிறுத்தையின் தோல் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT