திருத்தணி: திருத்தணி அருகே ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலரை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி அருகே புச்சிரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் திருத்தணி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரும், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மேல் நெடுங்கல் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலமும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆதிமூலத்துக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய, அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி பெண் காவலர் கேட்டதற்கு அவரை திருமணம் செய்து கொள்ள ஆதிமூலம் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த பெண் காவலர் அவர்களது உறவினர்களுடன், நேற்று முன்தினம் காவல் நிலையம் அருகே திருத்தணி - பொதட்டூர்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த, திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து, பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், காதலித்து திருமணம் செய்ய மறுத்த ஆதிமூலத்தை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.