உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு வரப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம். 
க்ரைம்

அரக்கோணம் | ஆவணமின்றி ரயிலில் கொண்டு சென்ற 1.3 கிலோ தங்க நகைகள், ரூ.37 லட்சம் பணம் பறிமுதல்

செய்திப்பிரிவு

அரக்கோணம்: தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வந்த ஆலப்புழா விரைவு ரயிலில் ரயில்வே போலீஸார் சோதனை நடத்தினர். பொது வகுப்பு பெட்டியில் பயணித்த, கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் கேம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (37) என்பவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணமும், தங்க ஆபரண நகைகள் இருப்பது தெரியவந்தது.

அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரிடம் இருந்த 37 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 357 கிராம் எடையுள்ள தங்க ஆபரண நகைகளும் இருப்பது தெரியவந்தது.

நாகராஜ்

தான் நகை வியாபாரி என்றும், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நகைகளை விற்பனை செய்த வகையில் கிடைத்த பணமும், மொத்தமாக கொண்டு சென்ற நகைகளில் மீதியுள்ள நகைகள் தான் அவை என போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தையும், தங்க நகைகளையும் ரயில்வே போலீஸார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சென்னை வருமான வரித்துறையினர் நாகராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT