தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
செந்தில்குமார் உடன்குடி சென்று, அங்குஹார்டுவேர் கடையொன்றில் ரூ.9.36 லட்சம்வாங்கிக் கொண்டு, நிறுவனத்துக்கு சொந்தமான வேனில் திரும்பியுள்ளார். வேனை தூத்துக்குடி ஜோதிபாசு நகரைச் சேர்ந்த கணபதி மகன் சின்னத்துரை (26) என்பவர் ஓட்டி வந்தார்.
குலசேகரன்பட்டினம் சாலையில் தருவைகுளம் பகுதியில் வந்தபோது, பின்னால் பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென வேனை வழிமறித்து செந்தில்குமாரை மிரட்டி ரூ.9.36 லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.
திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
செந்தில்குமார் பணம் வாங்கச் செல்வதை முன்கூட்டியே அறிந்து, ஓட்டுநர் சின்னத்துரையும், அதே நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு ஓட்டுநர் முத்துக்குமார் (32) என்பவரும் சேர்ந்து வழிப்பறிக்கான திட்டத்தை தீட்டியுள்ளனர். இதற்கு தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துமணி (26), அண்ணாநகரைச் சேர்ந்த ஜெய்லானி மகன் கமல்பாஷா (26) ஆகியோரின் உதவியை நாடியுள்ளனர்.
திட்டமிட்டபடி வேனை பின்தொடர்ந்து வந்த முத்துமணி, கமல்பாஷா ஆகியோர் செந்தில்குமாரிடம் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். பணத்தை முத்துமணியின் தாயார்முத்துலட்சுமி(55)யிடம் கொடுத்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.முத்துமணி, கமல்பாஷா, சின்னத்துரை, முத்துக்குமார், முத்துலட்சுமி ஆகிய 5 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.