எட்டயபுரம் அருகே பெண்ணை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே மேலநம்பி புரத்தில் நிலத்தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய அதிமுக ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்றத் தலைவி உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் மனைவி சரஸ்வதி (50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்ன அய்யப்ப நாயக்கர் மகன் அய்யலுசாமி என்பவருக்கும் இடையேநில உரிமை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மேலநம்பிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி அரசு புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்ய வந்த போது, சரஸ்வதி முதலில் தன்னுடைய நிலத்தை அளவீடு செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் அங்கிருந்த மற்றவர்களுக்கும், சரஸ்வதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு நில அளவீடு பணி தடைபட்டுள்ளது.

இந்நிலையில் மாலை 4 மணியளவில் சரஸ்வதியை மேலநம்பிபுரத்தை சேர்ந்த சிலர் கும்பலாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சரஸ்வதியின் தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் மேலநம்பிபுரத்தை சேர்ந்த புதூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தனவதி, அவரது மனைவியும் ஊராட்சிமன்றத் தலைவருமான சசிகலா, அதேகிராமத்தை சேர்ந்த ராஜசேகர், சிவசங்கரி, அய்யலுசாமி, அஜித்குமார், பிரபாகரன், தனுஷ், ராஜ்குமார் (என்ற) கூடப்பன் ஆகிய 9 பேர் மீது எட்டயபுரம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE