காரைக்குடி: காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்களை டவுசர் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10-வது வீதி தெற்கு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (56). இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ சிகிச்சைக்காக மே 4-ம் தேதி குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். வீட்டைச் சுற்றிலும் இவர் சிசிடிவி கேமரா பொருத்தி, தனது செல்போனுடன் இணைத்துள்ளார். இதன்மூலம் அவ்வப்போது சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணிப்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி அவர் தனது செல்போனில் கேமரா பதிவுகளை பார்த்தபோது, சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. சந்தேகமடைந்த அவர், தன் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு, சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்து இருந்தன.
இத்தகவல் அறிந்து அய்யப்பன் உடனே ஊர் திரும்பினார். வீட்டு பீரோவில் இருந்த 65 பவுன் தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.1.70 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க் என நினைத்து பேட்டரியை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து அழகப்பாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர். கொள்ளை நடந்த இடத்தில் தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.
தொடர்ந்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜூன்1-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொள்ளையர்கள், வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்ததுடன், சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. டவுசர் அணிந்திருந்த கொள்ளையர்களின் கையில் கவட்டை வில் இருந்ததும் தெரியவந்தது.
அய்யப்பன் குடும்பத்தினர் கூறியபோது, ‘‘சிசிடிவி கேமரா காட்சிகளை எந்நேரமும் செல்போனில் பார்க்க முடியும் என்றாலும், இரவில் தூங்கிவிட்டதால் கொள்ளை நடந்ததை உடனடியாக பார்க்க முடியவில்லை’’ என்றனர்.
கவட்டை வில்
டவுசர் அணிந்து கொள்ளையில் ஈடுபடும் இக்கொள்ளையர்கள் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கும் வீடுகளை கண்காணிக்கின்றனர். அதன்பிறகு கொள்ளையடிக்கச் செல்லும் அவர்கள், அன்றைய தினம் வீட்டுக்கு யாரும் வந்துவிட்டார்களா என்பதை அறிய, தொலைவில் இருந்து கவட்டை வில் மூலம் வீட்டின் கதவில் கல் எறிகின்றனர். சத்தம் கேட்டு யாரேனும் வருகிறார்களா என்பதை சிறிது நேரம் கவனிக்கின்றனர். வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கொள்ளையடிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.