ஆலந்தூர்: அமெரிக்காவில் உள்ளவரின் இந்திய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.44 லட்சம் எடுக்கப்பட்டது தொடர்பாக மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மடிப்பாக்கம் சத்சங்கம் தெருவை சேர்ந்தவர் சாம்பமூர்த்தி (61). இவரது மகள் அபர்ணா கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மடிப்பாக்கம் சபரி சாலையில் உள்ள தனியார் வங்கியில் அபர்ணா பெயரில் சேமிப்புக் கணக்கும் கிரெடிட் கார்டும் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மூலம் பணம் பெறப்பட்டதாக அமெரிக்காவில் உள்ள அபர்னாவுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதுகுறித்து அபர்ணா தனது தந்தைக்கு தகவல் அனுப்பி விசாரிக்கும்படி கூறியுள்ளார்.
உடனே சாம்பமூர்த்தி வங்கிக்குச் சென்று விசாரித்தபோது, ஓடிபி எண்கள் மூலம் ஒரே நாளில் 3 தவணையாக மொத்தம் ரூ.1.44 லட்சத்தை யாரோ எடுத்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சாம்பமூர்த்தி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.