ரூ.2 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்: சினிமா பாணியில் விரட்டி மடக்கிய போலீஸார்

By ந. சரவணன்

சினிமா பாணியில் போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு போதைப் பொருட்களுடன் தப்பிக்க முயன்ற வேன் ஓட்டுநர்களைச் சுங்கச்சாவடி அருகே போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

மனித உடலுக்குக் கேடு விளைவித்து உடல் நலனை பாதிக்கும் போதைப் பொருட்களான பான்பராக், ஹான்ஸ், குட்கா, மாவா உள்ளிட்டவற்றுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைக் கண்காணித்து போதைப்பொருள் விற்பனையை முழுமையாகத் தடுக்க வேண்டும் எனத் தமிழக அரசு, காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் கடத்தலைக் கண்காணித்து அதைத் தடுக்க ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் மீறி போதைப் பொருட்கள் கடத்தல் சமீபகாலமாக அதிகரித்துக் காணப்படுகிறது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து லாரிகள், கார்கள், இருசக்கர வாகனம் மூலம் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை வரை கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே எஸ்.பி. தனிப்படை போலீஸார் தடுப்புகளை அமைத்து நேற்று நள்ளிரவு (ஆக. 07) கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை (ஆக. 08) 1.30 மணியளவில் அந்த வழியாக ஒன்றன்பின் ஒன்றாக 2 லாரிகள், 2 கார்கள் வந்தன.

அந்த வாகனங்களைத் தனிப்படை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அங்கு நிற்காமல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு அந்த வாகனங்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி அசூர வேகத்தில் சென்றன. தனிப்படை போலீஸார் அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து விரட்டி வந்தனர்.

உடனடியாக ஆம்பூர் மற்றும் பள்ளிகொண்டா போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தடுப்புகளை பலப்படுத்திய போலீஸார் அங்கு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீஸார் பெரிய படையைத் திரட்டி சுங்கச்சாவடி அருகே நிற்பதைத் தொலைவில் இருந்து கவனித்த லாரி மற்றும் கார் ஓட்டுநர்கள் வாகனங்களைத் தொலைவிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர்.

பின்னால் விரட்டி வந்த தனிப்படை போலீஸார் காரில் இருந்த 2 பேரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து, லாரி மற்றும் காரைப் பரிசோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் ஆகியவை அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைத்து சென்னைக்குக் கடத்திச் செல்வது தெரியவந்தது.

அதன்பேரில், பெங்களூரு லால்பாக் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர்களான சந்திரசேகர் (42), முனியன் (35) ஆகிய 2 பேரைக் கைது செய்த பள்ளிகொண்டா போலீஸார் லாரி மற்றும் கார்களுடன் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

சினிமா பாணியில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற லாரி மற்றும் கார்களை விரட்டிச் சென்று 2 பேரை போலீஸார் கைது செய்த இச்சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சுற்றுச்சூழல்

15 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

31 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்