வேலூரில் விசாரணை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை: தலைமை காவலர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

By ந. சரவணன்

வேலூரில் விசாரணைக் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த சிறைத்துறை தலைமைக் காவலர் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைக்கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

வேலூர் மத்திய ஆண்கள் சிறை தொரப்பாடி - சித்தேரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு 742 பேரும், பெண்கள் தனிச்சிறையில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வெளியே இருந்து கஞ்சா விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இதைத் தடுக்க சிறைத்துறை நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், இதையும் மீறி கஞ்சா விநியோகம் செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது போன்ற சம்பவங்களை தடுக்க சிறைத்துறை நிர்வாகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், தற்போது கரோனா பரவலைத் தடுக்க புதிதாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் கொண்டு வரப்படும் விசாரணைக் கைதிகள் நேரடியாக சிறையில் அடைக்க அனுமதியில்லை.

மாறாக ஆண்கள் சிறைச்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறைக்காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 10 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான முடிவில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு விசாரணை கைதிகள் சிறைக்குள் அடைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சிறைக் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் கஞ்சா பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்து. இந்த புகாரை தொடர்ந்து, வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தலைமையில் சிறைத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறைக்காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் 50 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் பதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறைக்காவலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறைக் காவலர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றும் தலைமைக் காவலர் இளையராஜா, முதல் நிலை காவலர் செல்வகுமார், சிறை வார்டன் அஜித்குமார் ஆகிய 3 பேர் கஞ்சா பதுக்கி வைத்து விசாரணை கைதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சிறையில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரையும் சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி சஸ்பெண்ட் செய்து இன்று (ஜூலை 25) உத்தரவிட்டார்.

சிறைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள்க் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை காவலர்களே கஞ்சா விநியோகம் செய்து வந்த இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

9 mins ago

க்ரைம்

27 mins ago

சுற்றுச்சூழல்

33 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்