வட மாநிலங்களில் பிரபலமான 'பாங்' போதை பானத்தை தயாரித்த இருவர் ராமேசுவரத்தில் கைது

ஊரடங்கை பயன்படுத்தி வட மாநிலங்களில் பிரபலமான 'பாங்' போதை பானத்தை ராமேசுவரத்தில் தயாரித்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் கள்ளச் சந்தையில் மது கிடைக்காதா என ஏக்கத்துடன் ஆங்காங்கே சுற்றி திரிகின்றனர்.

மேலும் மதுக்கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்களும், கள்ளச் சாராயம் தயார் செய்து கைது ஆவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

வட மாநிலத்தில் 'பாங்' பிரபலமான போதை பானம் ஆகும். இந்த போதை பானத்தை சிவராத்திரி மற்றும் ஹோலி பண்டிகளின் போது அங்கு அதிகளவில் அருந்தப்படுகிறது. இதனை பால் மற்றும் புளித்த பழங்களுடன் போதை தரக்கூடிய இலை கொண்டு தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் ராமேசுவரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் தெரு அருகே 'பாங்' போதை பானம் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மதியம் அங்கு சென்ற காவல்துறையினர் மினரல் வாட்டர் கேன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் 'பாங்' போதை பானத்தை பறிமுதல் இதனை விற்பனை செய்த இருவரைக் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ராமேசுவரம் காந்தி நகரைச் சேர்ந்த பத்ரி (20), திட்டக்குடி தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (33) என்பது தெரியவந்தது.

எஸ். முஹம்மது ராஃபி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE