சென்னை உணவகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

சென்னை,

வேப்பேரியில் உள்ள உணவகத்தில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 4 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வேப்பேரி, வேப்பேரி ஹைரோடு, ஆரிய லேன் பகுதியில் குயாம் டிஃபன் சென்டர் என்கிற பெயரில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்றும் வழக்கம்போல் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பறிமாறிக் கொண்டிருந்தனர். சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கும் பணியும் நடந்துகொண்டிருந்தது.

இரவு 8.30 மணியளவில் வழக்கமான சமையல் பணி நடந்துகொண்டிருந்தபோது. சமையல் வேலை செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (எ) பண்ணாலா (25) என்பவர் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டிருந்தது தெரியாமல் கேஸ் அடுப்பைப் பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சமையல் சிலிண்டர் வெடித்ததில் உணவகத்தின் ஒரு பகுதி சுவர் முழுவதும் நான்கு மீட்டர் அகலத்துக்கு இடிந்து விழுந்தது. உணவகத்தில் உள்ள பொருட்கள் சிதறின. பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர். சிலிண்டர் வெடித்ததில் சமையல் அறையில் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 4 பேர் காயமடைந்ததனர்.

உடனடியாக தீயணைப்புத் துறை, காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் இடுபாடுகளில் சிக்கிய 4 நபர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த பிரவீன் குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அக்சய் (22) 28% தீக்காயம் அடைந்தார். அவருக்கு முகம், தலை, கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. ஸ்வாமி மஹாவீர் ட்ரஸ்ட் மேனேஜரான தீப்சிங்கின் (45) முகம், இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களில் தீக்காயம் ஏற்பட்டது.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சமையல் உதவியாளர் முகேஷ் குமாரின் (18) இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மற்றொரு சமையல் உதவியாளரான பிஹாரைச் சேர்ந்த சௌதாகரின் (19) தலை மற்றும் வலது காலில் தீக்காயம் ஏற்பட்டது.

தீக்காயம் அடைந்த 4 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வேப்பேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து உரிமையாளர் தீபக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE