புதுச்சேரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி மீனவப் பஞ்சாயத்தார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே செயல்படும் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமிக்கு அங்கு பணியாற்றும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்டபோது சரிவர பதில் கூறவில்லையாம். இதைக் கண்டித்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை சூறையாடியதுடன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக தவளக்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆசிரியர் மணிகண்டனை (25) போக்சோ பிரிவில் கைது செய்தனர்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்: இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 18 மீனவ கிராமப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்.பி.க்கள் வீரவல்லவன், பக்தவச்சலம் மற்றும் போலீஸாரும் கலந்துகொண்டனர்.
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளித் தாளாளர், முதல்வர் உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றின் நகல்கள் எஸ்.பி.க்களிடம் வழங்கப்பட்டன. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, “இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், மீனவர்கலை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.
மேலும், இந்த சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு கடும் தண்டனை பெற்றுத்தரக் கோரியும் மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் உள்ளிட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.