ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதேபோல, தேனி அருகே நேரிட்ட மற்றொரு விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் அருகே மதுரை-ராமேசுரம் தேசிய நெடுஞ்சாலையில், அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலைக் கல்லூரி முன், ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், ராமநாதபுரம் நோக்கி வந்த காரும் நேற்று நேருக்கு நேர் மோதின. இதில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரில் பயணித்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம் (48), ராதாகிருஷ்ணன் (55), சின்னமுனியாண்டி (45) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கருமலையான் (35) ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட 4 பேர் லேசான காயமடைந்தனர்.
விசாரணையில், ஒப்பந்ததாரரான குத்தாலிங்கம் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாகச் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்தப் பணிக்காக பணியாளர்களை அழைத்து வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
ஐயப்ப பக்தர்கள்... சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு சபரிமலைக்கு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அதேநேரம், ஓசூரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து, வேனில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். தேனி-திண்டுக்கல் புறவழிச் சாலை மதுராபுரி விலக்கு அருகே 2 வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த நாகராஜ் (40), சூர்யா (23), கோபி மகன் கனிஷ்க் (7) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 14 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அல்லிநகரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.