சென்னையில் தடை செய்யப்பட்ட 448 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர் 
க்ரைம்

சென்னையில் தடை செய்யப்பட்ட 448 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: மூவர் கைது 

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை துரைப்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 448 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள், மற்றும் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், “புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸார் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, துரைப்பாக்கம் (J-9) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று (மே 26) அதிகாலை துரைப்பாக்கம், தலைமைச்செயலக காலனி 5வது தெருவில், போலீஸார் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சிலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோவில் பார்சல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், வாகனங்களில் வைத்திருந்த பார்சல்களை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

குட்காவை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த தாமஸ் (48), குணசேகர் (31), ரகு (34), ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 448 கிலோ எடை ஹான்ஸ், விமல், கூல் லிப், எம்.டி.எம்., ரெமோ, ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், ஒரு இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் மற்றும் 3 செல்போன்களை போலீஸார், பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட தாமஸ் தனது வீட்டில் குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து, தனது கூட்டாளிகள் உதவியுடன் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT