க்ரைம்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் உட்பட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அப்போது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா முகவரியுடன் ராஜ் பர்மன் (31) என்ற இளைஞரும், சுப்ரதா (26) என்ற இளம்பெண்ணும் கோலாலம்பூரிலிருந்து வந்தனர்.

அவர்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர்கள் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்துவிட்டு ரயிலில் கொல்கத்தா செல்வதற்கான டிக்கெட்களும் வைத்திருந்ததால், அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனால், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு வங்கதேசத்திலிருந்து, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்குள், ரகசியமாக இருவரும் ஊடுருவியுள்ளனர்.

அதன் பின்பு கொல்கத்தாவில் ஏஜென்டுகள் மூலம் இந்திய பாஸ்போர்ட்டுகள் வாங்கி, அதன் மூலம் மலேசிய நாட்டுக்குச் சென்று, சில மாதங்கள் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, அதேபோலி பாஸ்போர்ட்டுகள் மூலம் தற்போது சென்னை திரும்பி வந்துள்ளனர் என்று தெரியவந்தது.

இவர்கள் நேரடியாக விமானத்தில் கொல்கத்தா சென்றால் அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் போலி பாஸ்போர்ட்டுகளை கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயத்தில், சென்னைவந்து இங்கிருந்து ரயிலில் கொல்கத்தா செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள் போலிபாஸ்போர்ட் மூலம் மலேசியாவிலிருந்து, சென்னைக்கு வந்த வங்கதேச இளம் பெண் மற்றும் இளைஞரைக் கைது செய்தனர். அதோடு மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT