சென்னை: சென்னையில் உள்ள மருத்துவக் கவுன்சில் அலுவலகத்தில் போலி மருத்துவப் படிப்புசான்றிதழ்களைச் சமர்ப்பித்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் அலுவலகத்துக்கு, தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி, ரஹமத்புரா பகுதியைச் சேர்ந்த ஆயிஷா தன்வீர்(40) என்ற பெண் நேற்று முன்தினம் வந்தார்.
‘தான் இளநிலைமற்றும் முதுநிலை மருத்துவப்படிப்பை முடித்துள்ளதாகவும், எனவே தனது மருத்துவப்படிப்பு சான்றிதழ்களைப் பதிவுசெய்ய வேண்டும்’ என்றும்மருத்துவக் கவுன்சில் அலுவலகத்தில் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார்.
இந்த சான்றிதழ்களை மருத்துவக் கவுன்சில் பதிவாளர் டாக்டர் காமராஜா சரிபார்த்தபோது, சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்பதுதெரியவந்தது. இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து போலியான மருத்துவப் படிப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து பதிவு செய்ய வந்த ஆயிஷா தன்வீரைக் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.