விபத்துக்குள்ளான வாகனம். 
க்ரைம்

பட்டுக்கோட்டை அருகே கார் விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தூத்துக்குடியிலிருந்து வேளாங்கண்ணிக்கு சென்றபோது பட்டுக்கோட்டை அருகே கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் மரியசெல்வராஜ் (37), இவரது மனைவி பத்மாமேரி(31). இவரது மகன் சந்தோஷ் செல்வம்(7), அதே பகுதியைச் சேர்ந்த் சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), லதா (40), சின்ன பாண்டி (40), ராணி (40), ஞானம்மாள் (60), பாக்கியராஜ் (62) ஆகிய 11 பேரும் வேளாங்கண்ணி மாதா கோயிலில் சந்தோஷ் செல்வத்துக்கு மொட்டையடிக்க நேற்று இரவு ஊரில் இருந்து டவேரா காரில் புறப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (20-ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனேரா பகுதியில் கார் வந்துக்கொண்டு இருந்த போது கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. இதில், ராணி, சின்னபாண்டி, பாக்கியராஜ், ஞானம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 7 பேரையும் 108 ஆம்புலென்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து இறந்தவர்களின் உடலை மீட்டு போலீஸார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இவ்விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT