க்ரைம்

சென்னை | உறவினர் சாவுக்கு காரணம் என நினைத்து இளைஞரை கொலை செய்த நண்பர் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: புளியந்தோப்பில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, புளியந்தோப்பு, பி.எஸ்.மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனு (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சூர்யா மற்றும் 5 பேர் பேச வேண்டும் என அழைத்ததன் பேரில், கடந்த 20-ம் தேதி இரவு, கன்னிகாபுரம், ரயில்வே டிராக் அருகில் உள்ள நீரேற்றும் நிலையம் அருகில் சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் சீனுவை தகாத வார்த்தைகளால் பேசி, கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்துவிட்டுத் தப்பியுள்ளனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாகக் கொலை தொடர்பாக புளியந்தோப்பு சூர்யா (24), அவரது கூட்டாளிகள் அதே பகுதி மணிகண்டன் (23), மற்றொரு மணிகண்டன் (20), சாமுவேல் (19) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் தற்போது கைது செய்யப்பட்ட சூர்யாவின் உறவினர் கிரி என்பவர் அண்மையில் இறந்துபோனார். அவரது சாவுக்கு சீனு வராததால், அவர் மீது சந்தேகப்பட்டு, சீனுவை கொலை செய்ய சூர்யா திட்டமிட்டு, தமது நண்பர்களுடன் சேர்ந்து, சீனுவை கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT