நாக்பூர்: தாலியம் எனப்படும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கொன்ற வழக்கில், 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு அருகிலுள்ள கட்சிரோலியின் மகாகாவ் பகுதியைச் சேர்ந்தஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்அண்மையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. விசாரணையின் முடிவில் கிராமத்தைச் சேர்ந்த சங்கமித்ரா கும்பாரே, ரோசா ராம்தேக்கே ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாலியம் விஷத்தை கொடுத்ததில் சங்கமித்ராவின் கணவர் ரோஷன், மாமனார் சங்கர், மாமியார் விஜயா, மாமியாரின் தங்கை வர்ஷா உராடே, ரோஷனின் தங்கை கோமல் தாஹேகாவ்கர் ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிலநாட்களில் அவர்கள் வீடு திரும்பிஉள்ளனர்.
ஆனால் சில நாட்களிலேயே 5 பேரும் இறந்தனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்ததால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. பில்லி சூனியம்வைத்ததால் அவர்கள் இறந்ததாகவதந்தி பரவியது. இந்த சூழலில்தான் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது, சங்கமித்ராவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சங்கமித்ராவின் செல்போனில் விஷம் குறித்து அவர் தேடியிருந்த விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோதுதான் உண்மை வெளியே வந்தது.
சங்கமித்ராவின் தந்தை அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தனது தந்தையின் சாவுக்கு தனது கணவர், மாமியார், மாமனார் குடும்பம்தான் காரணம் என்பதால் அவர்களை பழி வாங்க சங்கமித்ரா முடிவு செய்தார். கொலையும் செய்யவேண்டும், போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற முடிவில் விஷம் குறித்து இணையதளத்தில் தேடி இருக்கிறார். இந்நிலையில் தனது உறவினரும், தோழியுமான ரோசாவை கூட்டு சேர்த்துக் கொண்டு தெலங்கானா சென்று தாலியம் விஷத்தை வாங்கி உள்ளார்.
இதையடுத்து அந்த விஷத்தை சங்கமித்ரா உணவில் கலந்து, தனது மாமியார் வீட்டினருக்குக் கொடுத்துள்ளார். இதில், கணவர்ரோஷன், மாமனார் சங்கர், மாமியார் உள்பட 5 பேர் இறந்தனர்.
மேலும், ரோசாவுக்கும், தனது கணவரின் 4 சகோதரிகளுக்கும் இடையே 4 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் தகராறு இருந்தது. ரோசாவின் கணவர் பிரமோத்தின் தந்தையில் பெயரில் 4 ஏக்கர் நிலம் உள்ளது.
அதை தங்களுக்கு சரிசமமாகப் பிரித்துத் தருமாறு 4 சகோதரிகளும், பிரமோத்திடம் சண்டையிட்டு வந்துள்ளனர். இதையடுத்தே அவர்களையும் கொலை செய்ய தாலியம் விஷத்தை, சங்கமித்ராவுடன் இணைந்து வாங்கி வந்துள்ளார் ரோசா. சொத்துக்காக 2 பெண்களும்சேர்ந்து 2 குடும்பத்திலுள்ள மொத்தம் 16 பேரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் மற்றவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது 2 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.