கும்பகோணம்: பெண் போலீஸை பணி செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் ராதிகா. இந்நிலையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமரன்குடியைச் சேர்ந்த பிறையரசன், விசாரணைக்காக கும்பகோணம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்கில் பிறையரசனுக்கு எதிராகச் சாட்சியங்களை ராதிகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர், விசாரணை முடிந்ததும் பிறையரசனை உரிய போலீஸார் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு ராதிகா அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை முடிந்து வெளியில் வந்த ராதிகா, காவல் நிலையத்திற்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனம் இருக்கும் இடத்திற்கு வந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிறையரசன் தாயார் அமிர்தவல்லி (47), சகோதரி கௌசல்யா (26) மற்றும் சந்துரு (22) ஆகியோர் பெண் போலீஸ் ராதிகாவை, வழிமறித்து பிறையரசனுக்கு எதிராக சாட்சியங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக கூறி அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த அங்கிருந்த மற்ற போலீஸார் அந்த இடத்துக்கு வருவதற்குள், அவர்கள் 3 பேரும் தப்பியோடி விட்டனர்.
இது தொடர்பாக பெண் போலீஸ் ராதிகா, கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, ராதிகாவை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை கைது செய்தனர். பின்னர், அமிர்தவல்லி, கௌசல்யாவை திருச்சி சிறையிலும், சந்துருவை புதுக்கோட்டைச் சிறையிலும் போலீஸார் அடைத்தனர்.