மதுரை: பெண்களிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த வழக்கில் புரோக்கராக செயல்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஈரோட்டில் 16 வயது சிறுமி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது கருமுட்டைகள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு விற்கப்பட்டதாக கடந்தாண்டு புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. விசாரணையில் இந்த விவகாரத்தில் மாரிமுத்து என்பவர் புரோக்கராக செயல்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்ததாக மாரிமுத்து மீது தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மாரிமுத்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். இதையேற்று மாரிமுத்துவின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.