சென்னை: சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(24). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு கிண்டி மடுவாங்கரை பகுதி வழியாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வெட்ட முயன்றது. தினேஷ், தப்பி ஓடி வண்டிக்காரன் தெருவில் உள்ள ஒருகடைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து வந்த கும்பலில் 2 பேர் கடைக்குள் புகுந்து தினேஷை வெட்டிக் கொலை செய்தனர். இந்நிலையில், பயந்து வெளியே ஓடிவந்த கடை உரிமையாளர் கடையின் ஷட்டரை மூடி பூட்டிவிட்டு கிண்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
கிண்டி போலீஸார் வந்து தினேஷ் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளே இருந்த கொலையாளிகள் 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: ஆதம்பாக்கம் பகுதியில் ரவுடிகளான நாகூர் மீரான் மற்றும் ராபின்சன் கோஷ்டியினருக்கு இடையேயான தகராறில், நாகூர் மீரானை, ராபின்சன் கோஷ்டியினர் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ராபின்சன், மணி வண்ணன் (30), உதய் (28) உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, நாகூர்மீரான் கூட்டாளிகளுடன், ராபின்சனின் கூட்டாளிகளான தினேஷ் மற்றும் குணா ஆகிய இருவரும் இணைய இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்த ராபின்சனின் கூட்டாளிகளான மணிவண்ணன் மற்றும் உதய், சிறையிலிருந்து வெளி வந்த சில மணி நேரங்களிலேயே தினேஷை தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸார் கூறினர். இந்நிலையில் தப்பி ஓடிய காமேஷ் (25), ஈஸ்வர் (23), வசந்த்(27), தினேஷ்(19) ஆகிய 4 பேரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.