80 சதவீத கரோனா நோயாளிகள் தானாகவே குணமாகிறார்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது..
இது தொடர்பாக மருத்துவ கவுன்சில் இயக்குநர் பலராம் பார்கவா கூறும்போது, ''இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கரோனாவால் பாதிக்கப்படும் மக்களில் 80 சதவீதம் பேர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தானாகவே சரியாகி விடுகின்றனர்.
எனினும் பாதிக்கப்பட்ட எல்லோரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். 20 சதவீத மக்கள், சளி, இருமல், காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிலரை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டியுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 5 சதவீத மக்களுக்குப் போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் சிலருக்கு புதிய மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.
இதுவரை 15,000- 17,000 பேருக்கு சோதனைகளை நடத்தி இருக்கிறோம், தினந்தோறும் 10 ஆயிரம் பரிசோதனைகளை நடத்தும் திறன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் உண்டு.
வைரஸ் சங்கிலியைத் தடுக்க மக்களிடம் இருந்து ஒருவரை ஒருவர் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். காற்றில் கரோனா வைரஸ் பரவாது. தண்ணீர்த் துளிகள் மூலம் இது பரவும். பிரதமர் மோடியின் மக்கள் ஊடரங்கு வைரஸ் தொற்றைக் குறைக்கும்'' என்று பார்கவா தெரிவித்தார்.