ஒரு வாரத்துக்குள் இந்தியாவில் கரோனா தொற்று இரட்டிப்பாகி உள்ளதாகவும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''கோவிட்-19 காய்ச்சலால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை ஒரு வாரத்துக்குள்ளாக இரண்டு மடங்காகி உள்ளது. இந்த ஏற்றத்தை அடுத்து நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் யாரும் பயப்பட வேண்டாம். இந்த நேரத்தில் அனைவரும் உறுதியுடனும் தேசமாக ஒன்றிணைந்தும் இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி நகரத்தை மூடும் எண்ணம் தற்போது இல்லை என்றும் தேவைப்பட்டால் அரசு அதை மேற்கொள்ளும் என்றும் கேஜ்ரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.