கரோனா வைரஸ் பரிசோதனை | பிரதிநிதித்துவப் படம். 
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ்: தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச் சென்ற குடும்பத்தினர் நாசிக்கில் சிக்கினர்

பிடிஐ

வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பி ஓடிய நான்கு பேர் கொண்ட குடும்பம் போலீஸாரிடம் சிக்கினர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் நடந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புகள் பரவி வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும் முயற்சி இதில் முதன்மையானது ஆகும். இந்நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவர்கள் திடீரென்று தப்பிச் சென்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே இன்று கூறியதாவது:

''மகாராஷ்டிராவில் நாசிக் நகரில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் போலீஸாரிடம் சிக்கினர். மீண்டும் அக்குடும்பத்தினர் அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் பதார்தி ஃபாட்டா பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பம் மார்ச் 11 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பியது. மார்ச் 17 அன்று மாவட்டத்தின் இகத்புரிக்குச் சென்றிருந்ததாகத் தகவல்கள் கிடைத்தன. அவர்கள் தேடிக் கண்டறியப்பட்டனர். அதன் பிறகு இகத்புரி தாலுகா சுகாதார அதிகாரி டாக்டர் முகமது துராபலி தேஷ்முக் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த உத்தரவிட்டார்.

இருப்பினும், சுகாதார அதிகாரியின் உத்தரவை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மார்ச் 18-ம் தேதி அன்று நாசிக் நகரத்திற்கு அக்குடும்பத்தினர் வந்தனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் மார்ச் 19 அன்று இகத்புரியில் உள்ள கம்பாலேவுக்குச் சென்றனர்.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது தெரிந்தும் அவர்கள் இப்படி வெளியே சென்றது மிக மிகத் தவறான ஒரு செயல். அவர்களால் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பலரையும் பாதிப்புக்குள்ளாக்கும். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் போலீஸாரிடம் நாசிக்கில் சிக்கினர். அவர்கள் சிவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே தெரிவித்தார்.

SCROLL FOR NEXT